Loading....

நீட் விலக்கு: தமிழக ஆளுநரின் ஆணவப் பேச்சுக்கு எஸ்ஐஓ கண்டனம்

இன்று ஆளுநர் மாளிகையில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஒரு மாணவியின் தந்தை, நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தர மாட்டேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஆளுநர் என்ற நியமனப் பொறுப்பில் இருக்கும் ஆர்.என்.ரவியின் இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை, இங்குள்ள மாணவர்களுக்கு எது சரி என்பனவற்றை தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவு செய்யும். அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் ஆளுநரின் கடமை. ஆனால் அதை ஏற்க மாட்டேன் என அவர் கூறியது ஆளிநரின் ஆணவப் போக்கையே காட்டுகிறது.

நீட் தேர்விற்கு முன்பே மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. நீட் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறது என்பது தொட்டு, அது தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற வசதி வாய்ந்த மாணவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும், அவர்களே அதில் அதிக மதிப்பெண் பெறுவதாகவும் தமிழக மக்களாகிய நாம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறோம். மட்டுமின்றி, நீட் தேர்வால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இந்நிலையில், பெற்றோர்களின் கேள்விக்கு உரிய பதிலளிக்க முடியாமல் அந்த நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று அலட்சியமாகவும், அதிகாரத் திமிருடனும் கூறுவது கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். மாநில அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் தராமல், உயர் சாதியினருக்கு, சனாதனத்திற்கு ஆதரவாகவும், சமூக நீதிக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாகச் செயல்பட்டுவரும் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்ஐஓ வலியுறுத்துகிறது.

அஹ்மது ரிஸ்வான்,
மாநிலத் தலைவர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.

Back To Top