PM SHRI திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ₹2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மாற்றிய மத்திய பாஜக அரசின் தவறான மற்றும் அரசியல் நோக்கங்களை உடைய முடிவை எஸ்ஐஓ தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைகள் மீதான தாக்குதலையும் தமிழ்நாடு மீதான ஒன்றிய அரசின் அரசியல் பாகுபாட்டையும் வெளிப்படுத்தும் செயலாக உள்ளது.
தமிழ்நாடு அரசின் அனைவருக்கும் சமமான கல்வி என்ற கொள்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை (NEP) 2020 மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட நிலைபாடுகளுக்கு பழிவாங்கும் விதமாக இந்த நிதி மாற்றம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசை தனது முடிவுகளை திரும்பப் பெற வைப்பதும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை திணிப்பதுமே கல்வி நிதியை மாற்றிவிடுவதன் முக்கிய நோக்கமாகா உள்ளது.
எஸ்ஐஓவின் கோரிக்கைகள்:
- தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ₹2,152 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டின் கல்வி கொள்கைகளை சுயமாக தீர்மானிக்கும் உரிமையை ஒடுக்கும் அரசியல் மற்றும் நிதி ரீதியிலான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
- கூட்டாட்சி கொள்கைகளை மதிப்பீடு செய்து, ஒன்றிய அரசின் தலையீடு இன்றி மாநிலங்கள் சுயமாக கொள்கை முடிவுகளை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.