11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் அகமதிப்பீடு முறையால் தனித் தேர்வர்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) கோரிக்கை விடுக்கிறது.
தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கும், தனியாகத் தேர்வு எழுதுவோருக்கும் எல்லாப் பாடங்களிலும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்றால் அதில் 90 மதிப்பெண் எழுத்துத் தேர்வு மூலமாகவும், 10 மதிப்பெண் அகமதிப்பீடு வழியாகவும் வழங்கப்படுகிறது.
பெரும்பாலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டில் முழு மதிப்பெண் தரப்படும் நிலையில், 90க்கு 25 எடுத்தால் அவர்கள் தேர்ச்சி ஆகிவிட முடிகிறது. ஆனால், தனியாகத் தேர்வு எழுதுவோருக்கு இதே நிலை இல்லை. அவர்கள் 90க்குப் பரிட்சை எழுதி, அதை 100 மதிப்பெண்ணுக்கு மாற்றிக்கொள்ளும் நடைமுறை உள்ளது. இதனால் அவர்களுக்கு அகமதிப்பீட்டில் முழு மதிப்பெண் கிடைப்பதில்லை. இது அவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. உதாரணத்துக்கு, தனித் தேர்வர்கள் தேர்வாக வேண்டும் என்றால் 90க்கு 31.5 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்குக் குறைவாக எடுப்போர் தோல்வியடைகிறார்கள்.
தனித் தேர்வர்கள் தோல்வியடைவதற்கான வாய்ப்பை தற்போதைய நடைமுறை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது. பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத சூழலில் வளரும் சிறுவர்கள், இடைநின்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்ற அநேகர் தனியாகத் தேர்வு எழுதுவோராக உள்ளார்கள். தற்போது கடைப்பிடிக்கப்படும் அகமதிப்பீடு முறையால் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
எனவே, தனித் தேர்வர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணை தேர்வுகளின் வழியாக வழங்கக் கூடாது. ஒப்படைப்புகளைப் (assignments) பெற்று அவற்றைக் கொண்டு மதிப்பெண் வழங்க அல்லது இதுபோன்ற புதிய வழிமுறைகளைப் பரிசீலிக்க அரசு முன்வர வேண்டும் என்று எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.
– அஹ்மது ரிஸ்வான்,
மாநிலத் தலைவர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.