Loading....

இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இடஒதுக்கீடு: எஸ்ஐஓ வரவேற்பு

இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நீண்ட காலக் கோரிக்கைக்குத் தற்பொழுது தீர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இறைநெறியைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் புதிதாக இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு இருந்த சிக்கல் தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஓ இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது. குறிப்பாக, 2022 ஏப்ரலில் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தது. இந்தச் சமுதாயக் கோரிக்கையைப் பரிசீலித்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசின் செவிக்கு இந்தக் கோரிக்கையைக் கொண்டு சென்ற பல்வேறு தரப்பினருக்கும், குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படக் கூடாது, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு சரியான முறையில் சென்று சேர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

Back To Top