LGBTQIA+ ‘சமூகம்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரால் ஜூன் மாதம் Pride மாதமாகக் கொண்டாடப்படுகிறது. அவர்களின் நெறிபிறழ்ந்த செயல்களை இயல்பாக்கம் செய்யவும், அவற்றின் மீதுள்ள இயல்பான அருவருப்பைப் போக்கி, சமூக ஏற்பைப் பெறவும் இவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது. பல விதமான பாலின ஈர்ப்பையும், பாலின அடையாளத்தையும் கொண்டவர்களாக LGBT+ ‘சமூகத்தினர்’ தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் கருத்தியலைப் பரவலாக்குவதற்கு ஜூன் மாதத்தில் Pride பேரணிகள், நேரடி மற்றும் இணையவழி நிகழ்வுகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
ஒடுக்கப்பட்டோர் என்று சொல்லிக் கொண்டு தமிழக நகரங்களிலும் Pride பேரணிகள் அரசின் துணையோடு நடத்தப்படுகின்றன. LGBT+ கருத்தியலை விமர்சிக்கும் கருத்துகள், தனிமனிதர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. அதேவேளை, இந்தக் கருத்தியலை பள்ளிக்கூட பாடத்திட்டத்தில்கூட நுழைத்து குழந்தைகளைப் பாலியல்மயமாக்க முயற்சி செய்யப்படுகிறது. இச்சூழலில், பெற்றோர் தம் குழந்தைகளை இதிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்குதல் (inclusivity), பன்முகத்தன்மை (diversity) போன்ற முழக்கங்களைக் கொண்டு பெண்களின், பழங்குடியினரின், தலித்களின், சிறுபான்மையினரின் வாய்ப்புகளை LGBTயினர் தட்டிப் பறிக்க முனைகின்றனர். முக்கியமான சமூக பொருளாதார அரசியல் பிரச்னைகளிலிருந்தும் மக்களை தம் பக்கம் திசை திரும்புகின்றனர். அரசியல் சரித்தன்மை (political correctness) எனக் கூறி, எவ்வித ஆதாரமோ விவாதமோ இன்றி தங்களின் மனோ இச்சைகளை பொது மக்கள் அப்படியே ஏற்க நிர்பந்திக்கின்றனர். ஹார்மோன் சிகிச்சை, பாலின மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஆபத்தான மற்றும் இயல்புக்கு மாற்றமுடியாத அளவு உடலைச் சிதைக்கும் மருத்துவ சிகிச்சை முறைகளை வலியுறுத்துகின்றனர். மேலும், LGBTயினர் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவுவதைக் குறித்த அறிவியல் ஆய்வுகளையும் புறக்கணிக்கின்றனர்.
LGBT+ கருத்தியலுக்கு எதிராகக் கருத்துரைப்போர் மீது பல முத்திரைகள் குத்தப்படுகின்றன. அதுகுறித்து விவாதிப்பதற்கான வெளி கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது. LGBT+ நபர்களுடன் மக்கள் கண்ணியமாக உரையாடும்படி நாங்கள் வலியுறுத்துகிறோம். கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலை வலியுறுத்துகிறது இஸ்லாமிய அறவியல். அந்த வகையில், LGBT+ ‘சமூகத்தைச்’ சேர்ந்த, அவர்களை ஆதரிக்கிற முஸ்லிம் சகோதர சகோதரிகள் தங்களின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதிலும், நபிகளாரின் வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்தி, நமது பித்ரா எனும் இயல்புக்கும் மார்க்கத்துக்கும் மாற்றமான செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்வதோடு, பிறரையும் இப்படியான தீங்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
–இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)