தேசிய கல்விக் கொள்கை எனும் பிற்போக்கு கொள்கையை புறக்கணிப்போம்.!
திருப்பரங்குன்ற விவகாரத்தில் மதவாதத்தை கையில் எடுத்த பாஜக, மொழி அரசியல் மூலம் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்திடும் பிரிவினைவாத அரசியலை தற்போது முன்னெடுத்து வருகிறது.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மற்ற மாநிலங்களின் மொழியை, கலாச்சாரத்தை 90 விழுக்காடு ஆக்கிரமித்து விழுங்கியிருக்கும் ஹிந்தி மொழி, தமிழ்நாட்டு வளர்ச்சி சூழலுக்கு மூன்றாம் மொழியாக வருவது பொருத்தமற்றது என்பது தமிழ்நாட்டை ஆளும் அரசுகளின் கொள்கை மட்டுமல்ல, தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுவே. இது போன்ற சிந்தனைகளே இன்று வரை மற்ற மாநிலங்களை ஆக்கிரமித்துக்கொண்ட ஹிந்தி-இந்துத்துவ சிந்தனையை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
கூடுதலாக ஒருமொழியை கற்பதை அறிவாக மட்டுமே பாருங்கள் எனச்சொல்வதை அபத்தமான புரிதலாகவே நாம் பார்க்கிறோம். மூன்றாம் மொழியாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கு எதிரானதல்ல தமிழ்நாடு. ஏற்கனவே மூன்றாம் மொழியாக ஹிந்தி, பிரஞ்சு என பல்வேறு மொழிப்பாடங்கள் இங்கு கற்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
மொழி எனும் துருப்பு சீட்டின் மூலம் புதிய தேசிய கல்விக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவ செய்துவிட வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு முனைப்புடன் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் சில நிலைப்பாடுகள் உயர்கல்வி தளங்களில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டபோதிலும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் எந்த உள்ளீடும் செய்ய முடியாமல் இருப்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கல்வி மற்றும் மொழிக்கான நிதிப் பகிர்வில் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான போக்கைதான் பாஜகவின் செயல்பாடுகள் நமக்கு காட்டுகின்றன. இந்த தருணத்தில், நாம் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு மனநிலை, ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. மாறாக, இந்திய கூட்டாட்சிக்கு எதிரான பாஜகவின் பாசிச போக்கிற்கு எதிரானது என்பதை SIO அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.
இந்த தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய கல்விச்சூழல் மற்றும் அறிவு பெருக்கத்திற்கே எதிரானது என்பதையும், அதில் நிறைந்து காணப்படும் இந்துத்துவவாதிகளின் பிற்போக்குத்தனமான கருத்துகள் மீதான விமர்சனத்தையும் மக்கள் மத்தியில் SIO எடுத்துச்செல்லும்.
சா முஹம்மது சர்ஜூன்,
மாநில மக்கள் தொடர்பு செயலாளர்,
SIO தமிழ்நாடு.
+91 90427 88014