முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் தொடங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றப் போவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அறிவிக்கையை வெளியிட்டிருப்பது பாஜகவின் குயுக்தியையும், தோல்வி பயத்தையுமே காட்டுகிறது.
மதப் பாகுபாடுகளைக் கற்பிக்கும் சிஏஏ சட்டம் இயற்றப்பட்டபோது அதற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்களும், நீதியில் அக்கறையுள்ள அனைவரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தியே அரசியல் செய்யும் பாஜக, சிஏஏ சட்டத்தின் மூலம் இந்நாட்டின் முஸ்லிம் மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மைவாதத்தைத் தூண்டி அரசியல் லாபமடைவதற்காகவுமே தேர்தல் நேரத்தில் சிஏஏவை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது.
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக நாடகமாடி ஆட்சியைப் பிடித்த மோடி அரசு, பாபர் மசூதி, காஷ்மீர் 370, சிஏஏ என இந்தத் தேர்தலில் முழுமையாக முஸ்லிம் எதிர்ப்பை நம்பியே தேர்தலை எதிர்கொள்கிறது.
முஸ்லிம்களுக்கு பாரட்சம் காட்டும் இந்த சிஏஏ சம்பந்தமான அறிவிக்கையை வெளியிட்ட பாஜக அரசை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கண்டிக்கிறது. இச்சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறது. பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் அணிதிரண்டுள்ள அரசியல் கட்சிகள் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.
– அஹ்மது ரிஸ்வான்,
மாநிலத் தலைவர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.